தமிழகத்தில் நாளை முதல் 38 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் – எல். முருகன் அறிவிப்பு

தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, நாளை (ஆகஸ்ட் 18, 2025) முதல் மொத்தம் 38 ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 17) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பல்வேறு விரைவு, அதிவிரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் கூடுதல் நிறுத்தங்கள் வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து எனக்கு வந்தன. அவற்றை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் எடுத்துச் சென்றேன். அவரது உத்தரவின் பேரில், 38 ரயில்கள் இனி கூடுதல் நிலையங்களில் நிற்கும்,” என்றார்.

கூடுதல் நிறுத்தங்கள் பெறும் சில ரயில்கள்:

  • சென்னை சென்ட்ரல் – ஷிவமோகா வாராந்திர அதிவிரைவு ரயில் (12691) ஆம்பூரில் நிற்கும்; மறு மார்க்கம் (12692) வரும் போதும் ஆம்பூரில் நிற்கும்.
  • தன்பாத் – ஆலப்புழா விரைவு ரயில் (13351) குடியாத்தம் மற்றும் வாணியம்பாடியில் தலா 2 நிமிடங்கள் நிற்கும்.
  • கோவை – நாகர்கோவில் விரைவு ரயில் (16322) இருகூர் மற்றும் சிங்காநல்லூரில் நிற்கும்; மறு மார்க்கம் (16321) வரும் போது மேலப்பாளையத்திலும் நிற்கும்.
  • புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயில் (16861) வள்ளியூரில் நிற்கும்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

  • கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்காக சுமார் ₹10 லட்சம் கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டது.
  • 2025–26-ம் ஆண்டில், மாநிலத்தின் ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு ₹6,626 கோடி ஒதுக்கியுள்ளது. 2009–2014 காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான யூ.பி.ஏ. அரசு ஒதுக்கியது ₹879 கோடி மட்டுமே. அதைக் காட்டிலும் தற்போது ஒதுக்கப்பட்ட தொகை 654% அதிகம்.
  • அமிர்த பாரத் ரயில் நிலைய திட்டம் கீழ் தமிழகத்தில் ₹2,948 கோடி செலவில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. எழும்பூர் நிலையத்தை மட்டும் மேம்படுத்த ₹800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி, சேலம் ஆகிய நிலையங்களும் புனரமைக்கப்படுகின்றன.
  • 2,587 கி.மீ. தூரத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ₹33,467 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. 10 புதிய ரயில் பாதைகள், 3 அகல பாதைகள், 9 இரட்டை வழி பாதைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
  • சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் மேம்பாலத் திட்டமும் வேகமாக முன்னேறி வருகிறது.
Facebook Comments Box