கூத்தாநல்லூரில் தூங்கிக்கொண்டிருந்த குட்டிக்குழந்தையை தாக்கிய தெரு நாய் – காப்பாற்றச் சென்ற பாட்டியையும் கடித்தது!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மேலகொண்டாழி கிராமத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை நாய் கவ்விச் சென்று பலத்த காயம் ஏற்படுத்தியது.
அப்பகுதியைச் சேர்ந்த அபுதாகிர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சுல்தான் பீவி (26), தாய் மல்லிகா பீவி (44), மகன் அஜ்மல் பாஷா (1½) ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று காலை சுல்தான் பீவி குழந்தையை அருகில் படுக்கவைத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த தெரு நாய், குழந்தையை வாயில் கவ்வி ஓடிவிட்டது. குழந்தையின் அழுகை கேட்ட மல்லிகா பீவி விரைந்து சென்று காப்பாற்ற முயன்றபோது, நாய் குழந்தையை கீழே போட்டுவிட்டு, தலையில், கைகளில், கால்களில், காதில் கடித்தது. பாட்டியையும் கடித்து காயப்படுத்தியது.
அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து நாயை விரட்டினர். பின்னர் காயமடைந்த குழந்தையும் மல்லிகா பீவியும் முதலில் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.