நீதித்துறையை குறை கூறிய விவகாரம் – சீமான் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்ற உத்தரவு

நீதித்துறையை விமர்சித்ததாகக் கூறப்படும் பேச்சு தொடர்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து, தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க மதராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சீமான், நீதித்துறை மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விமர்சனமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர், “சீமான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” எனக் கோரி சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக சார்லஸ் அலெக்ஸாண்டர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த மனுவின் விசாரணை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில் சீமான் மரியாதையுடனும், நாகரிகத்துடனும் கருத்து தெரிவிக்க வேண்டும். ஆனால், அவர் கூறியவை அரசியலமைப்புக்கு முரணானவை. எனவே, அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவு வழங்கப்பட வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Facebook Comments Box