தமிழகத்தில் ஆகஸ்ட் 23 வரை மழை வாய்ப்பு
தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய–மேற்கு மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட ஆந்திரா – தென் ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அருகில் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இது மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 19-ம் தேதி மாலையில் தென் ஒடிசா – வட ஆந்திரா கடற்கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது.
மேற்கு திசை காற்றில் வேக மாற்றம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் நாளை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40–50 கிமீ வேகத்தில், இடையிடையே 60 கிமீ வரை வீசலாம். ஆகஸ்ட் 19 முதல் 23 வரை மாநிலம் முழுவதும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது.
தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும் நாளை மறுநாளும் சூறாவளிக் காற்று மணிக்கு 40–50 கிமீ வேகத்தில், சில நேரங்களில் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவுகள்:
- கோவை மாவட்டம் சின்னக்கல்லார் – 9 செ.மீ.,
- வால்பாறை – 7 செ.மீ.,
- சோலையார், சின்கோனா, உபாசி, நீலகிரி நடுவட்டம் – தலா 5 செ.மீ.,
- தென்காசி குண்டாறு அணை, நீலகிரி அவலாஞ்சி, திருநெல்வேலி நாலுமுக்கு – தலா 4 செ.மீ.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.