ரஷ்யாவில் மருத்துவம் படித்த தமிழக மாணவர் ராணுவ உடையில் – பெற்றோருக்கு அதிர்ச்சி
ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கிஷோர் (23) ராணுவ உடையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2021-ம் ஆண்டு மருத்துவம் படிக்க ரஷ்யா சென்ற கிஷோர், 2023-ல் போதைப்பொருள் டெலிவரி செய்ததாக ரஷ்ய போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த மற்ற மாணவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், கிஷோர் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த நித்திஸ் இன்னும் சிறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், ராணுவ தளத்தில் தன்னைப் பயிற்சி அளித்து, உக்ரைன் போரில் ஈடுபடுத்த இருப்பதாகக் கூறி கிஷோர் வீடியோவொன்றை பெற்றோருக்கு அனுப்பியிருந்தார். இதற்காக பெற்றோர் மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளித்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கிஷோர் ராணுவ உடையுடன், கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் மீண்டும் வெளியானது. இதனால் பெற்றோர் கடும் பதட்டத்தில் உள்ளனர்.
“பொய்யான வழக்கில் எங்கள் மகன் சிக்கியுள்ளார்; அவரை மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.