மதுரை மாநாடு வெற்றிக்காக கருப்புச்சாமி கோயிலில் கிடா விருந்து – பிரம்மாண்ட ஏற்பாடுகள் வேகமாக

மதுரை மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில், கருப்புச்சாமி கோயிலில் கிடா வெட்டி பொதுமக்கள், தொண்டர்களுக்கு தவெகவினர் விருந்தளித்தனர்.

மதுரை–அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 500 ஏக்கர் பரப்பளவில் திடல் ஒதுக்கப்பட்டு, மேடை அமைப்பு, வாகன நிறுத்தம், தலைவர் மற்றும் நிர்வாகிகள் வருகைக்கான தனித்தனி வழிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மதுரையில் முகாமிட்டு, நிர்வாகிகளுடன் இணைந்து அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.

மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகள் திடலை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். மாநாடு இன்னும் சில நாட்களில் நடைபெறவிருப்பதால், பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மதுரை நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மூலம் அழைப்பிதழ் பிரச்சாரம் நடைபெறுகிறது. தென்மாவட்டங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டி மாநாட்டுக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 21 அன்று மாலை 3 மணிக்கு கொடி ஏற்றுதல், உறுதிமொழி, கட்சி கொள்கை பாடல், தீர்மானம் நிறைவேற்றல், விஜய் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கி இரவு 7.30 மணிக்கு நிறைவடையும். மேடைக்கு அருகில் 100 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டு, அதில் தலைவர் விஜய் ரிமோட் மூலம் கட்சி கொடியை ஏற்ற உள்ளார். திடல் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட கொடிகள் ஏற்கனவே பறக்கவிடப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு, மதுரை வலையங்குளம் ஏர்போர்ட் கருப்புச்சாமி கோயிலில் மாநாடு வெற்றியடைய வேண்டி கிடா விருந்து நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஆனந்த் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அசைவ உணவு உண்டனர்.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் தெரிவித்ததாவது: “பொதுச் செயலாளர் தலைமையில் பகல், இரவு பாராமல் மாநாட்டு பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 90 சதவீத ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. திடலில் 100 அடி உயரத்தில் கொடி ஏற்றும் பணியும் நடந்து வருகிறது. தலைவர் விஜய் மேடையிலிருந்து ரிமோட் மூலம் கொடியை ஏற்றுவார். மாநாடு வெற்றியடைய வேண்டி கருப்புச்சாமி கோயிலில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது” என்றனர்.

Facebook Comments Box