சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி விண்ணப்ப செயல்முறை, தகுதி நிபந்தனைகளில் மாற்றம்

தமிழகத்தில் சுயசான்று முறையில் கட்டிட அனுமதி பெறும் நடைமுறையில், விண்ணப்பிக்க இயல்புடையவர், விண்ணப்பிக்கும் விதிமுறை, கட்டிடத்தைச் சுற்றி விடப்படவேண்டிய இடம் தொடர்பான நிபந்தனைகளில் மாற்றம் செய்து, அரசிதழ் மூலம் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படி, சுயசான்று குடியிருப்பு கட்டிடம் என்பது 2,500 சதுரஅடி மனைப்பரப்பில், அதிகபட்சம் 3,500 சதுரஅடி வரையிலான குடியிருப்பு கட்டிடம் ஆகும். அதாவது, அதிகபட்சமாக தரைத் தளம் மற்றும் முதல் தளம் அல்லது, தரைகீழ் தளம் மற்றும் இரு தளங்கள் என, மொத்த உயரம் 10 மீட்டரைத் தாண்டாமல் அமைக்கப்படும் கட்டிடம் ஆகும். இத்தகைய கட்டிடம் கட்டுவதற்கோ, மறுகட்டுமானம் செய்வதற்கோ அனுமதி பெற, நில உரிமையாளர், நில குத்தகையாளார் அல்லது சட்டப்படி அதிகாரம் பெற்றவர் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

விண்ணப்பம் செய்யும் போது, மனைப்பகுதி புகைப்படம், நில உரிமையை உறுதிப்படுத்தும் சுயசான்றிட்ட விற்பனைச் சான்றிதழ், சுயசான்றிட்ட பட்டா அல்லது டவுன் சர்வே நிலப் பதிவேடு ஆவணம், மனைப்பிரிவு அனுமதி அல்லது உட்பிரிவு அனுமதி தொடர்பான ஆவணம், மனைப் பிரிவு சட்டப்படி செய்யப்பட்டதற்கான ஆதாரம் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.

மேலும், கட்டிடத்திற்கான வரைபடத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இவை அனைத்தும் ‘A4’ தாளில் அளிக்கப்பட வேண்டும். அளிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானவை என விண்ணப்பதாரர் சுயமாகச் சான்றளிக்க வேண்டும். அதோடு, சுயசான்று கட்டிடத்திற்கு விண்ணப்பிக்கும் சூழலில், மனை இடத்தைச் சுற்றியுள்ள சாலை அகலம், கட்டிடத்தின் அதிகபட்ச உயரம், தளப்பரப்பு விகிதம், குறைந்தபட்சமாக சுற்றிலும் விடப்பட வேண்டிய இட அளவு ஆகியவைவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன் படி, தொடர் கட்டிடம் அமைந்த பகுதி அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பகுதியாக இருந்தால் சாலை அகலம் குறைந்தபட்சம் 1.5 மீட்டர் இருக்க வேண்டும்; மற்ற பகுதிகளில் 3 மீட்டர் இருக்க வேண்டும். கட்டிடத்தின் அதிகபட்ச உயரம் 10 மீட்டரைத் தாண்டக்கூடாது. தளப்பரப்பு குறியீடு அதிகபட்சம் 2 மடங்காக இருக்கலாம்.

அதேபோல், சாலை அடிப்படையில் சுற்றியிட வேண்டிய இடமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, கட்டிடத்தின் முன்புறம் மனையின் உள்ளே, தொடர் கட்டிடப் பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் 1.5 மீட்டர் இடம் விடப்பட வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பகுதியில் 1 மீட்டர் விடப்பட வேண்டும். கட்டிடம் 7 மீட்டர் உயரம் வரை இருந்தால், தொடர் கட்டிடப் பகுதிகளிலும், பின்தங்கியோர் பகுதிகளிலும் இருபுறமும் இடம் விட தேவையில்லை. மனை அகலம் 9 மீட்டர் வரை இருந்தால், ஒரு பக்கத்தில் 1 மீட்டர் விட வேண்டும்; 9 மீட்டருக்கு மேல் இருந்தால், இருபுறமும் தலா 1 மீட்டர் அல்லது ஒருபுறம் 2 மீட்டர் விடப்பட வேண்டும்.

கட்டிடத்தின் உயரம் 7 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை இருந்தால், மனை அகலம் 9 மீட்டர் வரை இருந்தால் ஒரு புறம் 1 மீட்டர் விட வேண்டும். 9 மீட்டருக்கு அதிகமாக இருந்தால், இருபுறமும் தலா 1.2 மீட்டர் விடப்பட வேண்டும். மேலும், கட்டிடம் 7 முதல் 10 மீட்டர் உயரம் வரை இருந்தால் பின்புறத்தில் 1 மீட்டர் இடம் விடப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box