சுவாமிமலை கோயிலுக்கு தானமாக வழங்கிய விடுதி பராமரிப்பின்றி பாழடைந்தது – அறநிலையத் துறை அலட்சியம்!

கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலுக்கு வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அங்குள்ள தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், எளிய வசதிகளில் பக்தர்கள் தங்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால், சென்னையைச் சேர்ந்த, சுவாமிமலை சுவாமியை குலதெய்வமாகக் கொண்ட பக்தர் ஒருவர், கோயிலுக்கு வருவோருக்காக நவீன வசதிகளுடன் கூடிய விடுதியை கட்டித் தர முடிவு செய்தார்.

அதன்படி, சுவாமிநாதசுவாமி நகரில் 8,000 சதுர அடியில் நிலம் வாங்கி, அதில் 4 கட்டிடங்களாக 16 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை கட்டினார். பின்னர், அந்த விடுதியை 2022 ஏப்ரல் 5ஆம் தேதி சுவாமிமலை கோயிலுக்கு தானமாக வழங்கினார். ஆனால், கோயில் நிர்வாகம் அதை முறையாக பராமரிக்காததால், கட்டிடங்கள் தற்போது செடி, கொடிகள் மண்டி சேதமடைந்துள்ளன.

விஹிப் முன்னாள் தலைவர் ராஜா கண்ணன் கூறியது:

“சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தில், அனைத்து நவீன வசதிகளுடனும் 16 அறைகள் கொண்ட விடுதியை ஒருவர் கோயிலுக்கு தானமாக வழங்கினார். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும், அந்த விடுதி பயன்படுத்தப்படாமல் பாழடைந்து வருகிறது. கட்டிடங்களில் மரங்கள் முளைத்தும், செடி-கொடிகள் சூழ்ந்தும் சேதமடைந்து வருகின்றன. அறைகளில் இருந்த ஏசி, மின்விளக்கு, இருக்கைகள் போன்ற பொருட்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பது கூட தெரியவில்லை.

அறநிலையத் துறை அலட்சியம் காட்டாமல், அந்த விடுதியை சீரமைத்து, குறைந்த வாடகையில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். பணியாளர்களுக்கு வாடகைக்கு விடுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

அறநிலையத் துறை விளக்கம்:

“அந்த விடுதியை சீரமைத்து, கோயில் பணியாளர்களுக்கு வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதத்திலிருந்து பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் விடுதி திறக்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Comments Box