“தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக…” – மதுரை மாநாட்டில் விஜய் உரை
மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு, கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து அக்கட்சித் தலைவர் விஜய் உரையாற்றினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், மங்கல இசை மற்றும் சிறப்புப் பாடலுடன் கூட்டம் தொடங்கியது. அதில் விஜய் பேசியதாவது:
“ஒரு கானகத்தில் சிங்கம், புலி, நரி இருந்தாலும் சிங்கம்தான் காட்டின் ராஜா. சிங்கம் வேட்டைக்குப் போனாலும் தனியாகத்தான் போகும். தன்னைவிட பெரிய விலங்கையே வேட்டையாடும். அதுதான் நம்ம நிலைப்பாடு.
சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். அவரோடு பழகும் வாய்ப்பு இல்லை. ஆனால், மதுரையில் பிறந்த விஜயகாந்த்துடன் பழகிய சந்தோஷம் கிடைத்தது. அவரை என்றும் மறக்க முடியாது. தவெகவின் அரசியல் உண்மையானது, உணர்வுப்பூர்வமானது, மக்களுக்கானது, நல்லதை மட்டுமே செய்யும் அரசியல்.
விக்கிரவாண்டி மாநாடு தமிழக அரசியலை மாற்றியது. இன்று இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல் ஒற்றைக் குரல் அல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். இந்தக் குரல் மாநில உரிமைக்காக, பெண்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக ஒலிக்கிறது.
நான் கட்சி தொடங்குவதற்கு முன் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆரம்பிக்க மாட்டார் என்றார்கள். பிறகு கட்சியை அறிவித்தேன். மாநாடு நடத்தினேன். இப்போது இரண்டாவது மாநாடு நடக்கிறது. ஆனால், கட்சி தொடங்கினாலே ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. ஆட்சியைப் பிடிப்பது எளிதல்ல. ‘ஷூட்டிங்கில் இருந்து வந்து ஆட்சியைப் பிடிப்பாரா?’ என்றார்கள். இந்தக் கூட்டம் ஓட்டாக மாறும். ஆட்சியாளர்களுக்கு வேட்டையாகவும், நமக்கு கோட்டையாகவும் மாறும்.
நான் அரசியலுக்கு வந்தது பெண்கள், முதியவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என எல்லோருக்கும் நன்மை செய்யவே.
நமது ஒரே கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக. எங்களுக்கு யாருக்காகவும் பயமில்லை. பாசிச பாஜகவுடன் உறவு வைக்க மாட்டோம். 2026 தேர்தலில் தவெக – திமுக இடையே தான் போட்டி. கூட்டணியால் தப்பிக்க முடியாது.
பிரதமர் மோடி அவர்களே, மீனவர் பிரச்சினையை நிறுத்த கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். செய்வீர்களா? இல்லையெனில், மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் 2029 வரை சொகுசுப் பயணம் போகலாம் என நினைக்கிறீர்களா? உங்கள் திட்டம் எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
தமிழகத்தில் எம்ஜிஆர் மாஸ் தலைவர். ஆனால் இன்று அவரது கட்சி எப்படிப் போயிருக்கிறது? தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள். பாஜகவின் வித்தை இங்கே வேலை செய்யாது.
ஆட்சியில் இருக்கும் திமுக பாஜகவுக்கு மறைமுக ஆதரவு தருகிறது. டெல்லியில் சீக்ரெட் மீட்டிங் நடத்துகிறது. ‘ஸ்டாலின் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள்.’ மக்களிடம் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? இல்லை என்று மக்கள் முழங்குகிறார்கள். அது விரைவில் போர்முழக்கமாக மாறும்.
நான் நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். 30 வருடங்களுக்கு மேலாக நீங்கள் என்னை தாங்கி நிறுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்காகவே வந்துள்ளேன். 2026-ல் கபட நாடக திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன்.
வேட்பாளர் பட்டியல் – மதுரை கிழக்கு விஜய், மதுரை மேற்கு விஜய், சோழவந்தான் விஜய், உசிலம்படி விஜய். உண்மையில், 234 தொகுதிகளிலும் நான்தான் வேட்பாளர். நீங்கள் தவெகவுக்கு வாக்களித்தால் அது எனக்கே வாக்களித்ததுதான்.
என்னை சினிமாக்காரன் என்கிறார்கள். எல்லா சினிமாக்காரனும் முட்டாளல்ல, எல்லா அரசியல்வாதியும் அறிவாளி அல்ல. நான் மக்களுக்கான உண்மையான அரசியல்வாதி” என்று விஜய் பேசினார்.
விஜய் சொன்ன குட்டிக் கதை:
ஒரு ராஜா உண்மையான தளபதியைத் தேர்வு செய்ய 10 பேருக்கு அவித்த நெல்லை விதையாகக் கொடுத்தார். 9 பேர் பொய்யாக செடிகளை வளர்த்து கொண்டுவந்தனர். ஒருவரே வெறும் தொட்டியுடன் வந்தார். ‘வளர்க்க முடியவில்லை’ என்று அழுதார். அவரே உண்மையைச் சொன்னதால், ராஜா அவரையே தளபதியாகத் தேர்ந்தெடுத்தார்.
“நீங்கள் தான் அந்த ராஜா. உண்மையான தளபதியைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்” என்று விஜய் முடித்தார்.