அதிமுக – தவெக மறைமுக கூட்டணி: விசிக வைக்கும் ‘தர்க்கம்’
“அதிமுகவும் தவெகவும் இடையே மறைமுக கூட்டணி இருப்பது, விஜய்யின் மதுரை மாநாட்டில் நிகழ்த்திய உரையின் மூலம் வெளிப்படுகிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:
“தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் குறித்து தவெகத் தலைவர் விஜய் பேசியுள்ளார். ஆனால் அந்தச் சூட்டில் கொலைவெறி நடத்தி பலியெடுத்த அதிமுக அரசைக் குறித்து ஒரு வார்த்தையும் அவர் சொன்னதே இல்லை.
திமுக – பாஜக இடையே மறைமுக கூட்டணி உள்ளது என்று குற்றஞ்சாட்டும் விஜய், அதற்கான சான்றுகளை வெளிக்கொணராமல், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறிய கருத்துக்களையே மீண்டும் கூறியுள்ளார். இதனால் உண்மையில் அதிமுகவுக்கும் தவெகவுக்கும் தான் மறைமுக கூட்டணி இருக்கிறது என்பதும் வெளிச்சமடைகிறது.
மேலும் அந்தக் கூட்டணியில் பாஜகவும் இருப்பதால், அதிமுக – பாஜக கூட்டணியின் மறைமுக கூட்டணி பங்குதாரராக விஜய் செயல்படுகிறார் என்பதே தவெக மாநாடு தரும் செய்தி” என வன்னியரசு தெரிவித்துள்ளார்.