“முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் தரவேண்டுமா?” – விஜய் குறித்து எழுந்த கேள்விக்கு கமல்ஹாசன் விளக்கம்
“மார்க்கெட் குறைந்தபின் தஞ்சம் தேடி அரசியலில் இறங்கவில்லை” என்று விஜய் கூறியதற்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபதியில் நடைபெற்றது. அங்கு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு, கொள்கை எதிரிகள், அரசியல் எதிரிகள், கட்சியின் திட்டங்கள் போன்ற பல அம்சங்களைத் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“ விரைவில் மக்களை சந்திக்கப் போகிறேன். அது இடிமுழக்கம் போல் இருக்கும்; அது போர்முழக்கமாக மாறும். நான் மார்க்கெட் இழந்த பின்பு பாதுகாப்பு தேடி அரசியலில் நுழையவில்லை. ஆயுதத்துடன் அரசியலுக்கு வந்துள்ளேன். அதோடு, நன்றிக்கடனைச் செலுத்தவும் அரசியலுக்கு வந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை நீங்கள் தாங்கி வந்துள்ளீர்கள். உங்களுக்காகத்தான் வந்துள்ளேன். உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்.”
இந்த உரை சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், “மார்க்கெட் போன பின்பு அரசியலில் அடைக்கலம் தேடவில்லை” என்ற அவரது கூற்று கமல்ஹாசனை குறித்தே என பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கமல்ஹாசனிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
“விஜய் யாரின் பெயரையும் வெளிப்படையாகச் சொன்னாரா? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் என்ன பதில் சொல்வது? அவர் என் தம்பி” என்று கூறினார்.