தூய்மை பணியாளர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்தார்.
சுதந்திர தினம், ஜென்மாஷ்டமி விடுமுறையை தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதையொட்டி, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து நீண்ட நாட்களாக பேசிக்கொண்டு இருக்கிறேன். என் பேச்சுகளை முழுமையாக கவனிப்பவர்களுக்கு அது தெரியும். தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளை நாம் உடனடியாக பேசி சரிசெய்ய வேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம்.”
விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றன்னை மறைந்துள்ளார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். திருமாவளவனுக்கு இந்த தகவல் நேற்றே (16-ம் தேதி) தெரியும். ஆனால், தொண்டர்களின் மகிழ்ச்சிக்காக, பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.
சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் பேசிய பதிவை அனுப்பியுள்ளேன்,” இவ்வாறு அவர் கூறினார்.