ஆகஸ்ட் 26 முதல் நகர்ப்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

தமிழகத்தின் முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றான முதல்வரின் காலை உணவு திட்டம், இப்போது நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. இதனை வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:

  • தொடக்கம் (2022):

    முதல்வரின் காலை உணவு திட்டம், நாடு முழுவதும் முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 2022 செப்டம்பர் 15-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

  • முதல் விரிவாக்கம் (2023):

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், 2023 ஆகஸ்ட் 25-ஆம் தேதி திட்டம் விரிவாக்கப்பட்டது. இதன் மூலம், 30,992 பள்ளிகளில் 18.50 லட்சம் மாணவர்கள் சூடான, சுவையான காலை உணவைப் பெற்றனர்.

  • அடுத்த கட்ட விரிவாக்கம் (2024):

    காமராஜர் பிறந்த நாளான 2024 ஜூலை 15-ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் திட்டம் விரிவாக்கப்பட்டது. இதனால், 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 2.24 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர்.

  • திட்டத்தின் பலன்கள்:

    இந்தத் திட்டம் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றல் மேம்பட்டுள்ளது. ஆய்வில், 90% க்கும் மேற்பட்ட மாணவர்கள் முந்தைய பாடங்களை எளிதில் நினைவுகூரும் திறன் பெற்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்து, குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது.

  • சர்வதேச அங்கீகாரம்:

    தமிழகத்தை பின்பற்றி தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. மேலும், கனடா அரசும் தமிழகத்தின் காலை உணவு திட்டத்தை தனது நாட்டில் அமல்படுத்தியுள்ளது.

  • புதிய விரிவாக்கம் (2025):

    நகர்ப்புறங்களில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 3.05 லட்சம் மாணவர்கள் இனி தினமும் காலை உணவு திட்டத்தின் பயன்களைப் பெறுவார்கள்.

Facebook Comments Box