‘தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கக் கூடாது’ – திருமாவளவன் கருத்துக்கு எழும் எதிர்ப்பு
“தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்தக் கூடாது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ‘மாற்றுப் பார்வை’ நிகழ்ச்சியில் கூறிய கருத்து, பல தரப்பினரின் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு, தனியார்மய எதிர்ப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறை நள்ளிரவில் திடீர் நடவடிக்கையாக கைது செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடந்த இந்த நடவடிக்கை, பல்வேறு அரசியல் வட்டாரங்களில் கண்டனத்தை சந்தித்தது.
“சமூக நீதி அரசு எனச் சொல்லிக் கொள்கின்ற தமிழ்நாடு அரசு இவ்வாறு நடந்துகொள்வதா?” என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணிக் கட்சிகளும் இந்தக் கைது நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தன.
போராட்டம் நடந்தபோது தூய்மைப் பணியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை வலியுறுத்திய திருமாவளவன், கைது நடந்த பின் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் முற்றிலும் மாறுபட்ட கருத்து வெளியிட்டது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அவர், “குப்பை தூக்கும் பணியைச் செய்பவர்களை நிரந்தரம் செய்வது தவறு. அவர்கள் அந்தத் தொழிலிலேயே கட்டாயப்படுத்தப்படுவது சரியல்ல. சாக்கடை சுத்தம் செய்பவன் அதையே தொடரட்டும் என்ற எண்ணத்திற்கு ஆதரவாகிவிடும். இதைப் போராடும் பணியாளர்களிடம் சொன்னால், நாம் அவர்களுக்கு எதிராகப் பேசுகிறோம் என்று எண்ணுவார்கள். அதனால் தான் நாமும் நிரந்தரம் செய்யுங்கள் என முன்பே சொன்னோம். ஆனால் உண்மையில் பணி நிரந்தரம் தரக் கூடாது என்பதே சரியான கருத்து. தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளும் இதே வேலையே செய்ய வேண்டுமா?” என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல துறைகளில் பணி நிரந்தரம் கோரிக்கை உள்ளது. நீண்ட காலமாகப் பணியாற்றுபவர்கள், ஊதியம், காப்பீடு, பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்ற நலன்களுக்காகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டால், நலன்கள் அதிகரித்து அவர்களின் பிள்ளைகளும் நல்ல கல்வி பெற்று முன்னேற்றம் அடைவார்கள்.
ஆனால் நிரந்தரம் இல்லையென்றால், தனியார் சுரண்டலில் சிக்கி வாழ்க்கைத் தரம் மேலும் மோசமடையும். எனவே திருமாவளவனின் கருத்து தவறானது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாமக தலைவர் அன்புமணி, “13 நாட்கள் போராட்டத்தில் இருந்தபோது முன்வைக்கப்படாத இந்த யோசனைகள், கைது நடவடிக்கைக்குப் பிறகு திடீரென கூறப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. மக்களின் கோபத்திலிருந்து அரசை காப்பாற்றுவதற்காகவே இவ்வாறு பேசப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்திற்கான மாற்று வழிகள் பற்றி ஒன்றும் கூறாமல், பணி நிரந்தரம் தரக் கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது துரோகம். சமுகநீதி என்ற பெயரில் சுரண்டப்படுவதை யாரும் அனுமதிக்கக் கூடாது” என்றார்.
மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர் எல்.முருகன், “தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வும் தரப்பட வேண்டும். பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் அவர்களுக்காக குரல் கொடுத்ததே இல்லை. திமுக கூட்டணியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதே அவரது குறிக்கோள்” என விமர்சித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், “தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கூடாது எனும் திருமாவளவனின் கருத்து தவறானது. எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று நிரந்தர ஊதியத்தின் மூலம் குழந்தையை படிக்கவைத்து இன்று பேராசிரியராக வளர்த்துள்ளது. நிரந்தரம் இல்லையென்றால் அந்தக் குழந்தையும் தூய்மைப் பணிக்கே வந்திருப்பார். அடுத்த தலைமுறை முன்னேற்றத்திற்கான பாதை நிரந்தரம் மூலமே சாத்தியம். பரம்பரையாக வேலை தர வேண்டும் என்பதல்ல, தற்போது பணியில் உள்ளவர்களுக்கு மட்டும் நிரந்தரம் வேண்டும்” என்றார்.
இதனால், திருமாவளவன் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கூட்டணி கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்க தொடங்கியுள்ளன. இதற்கு அவர் என்ன விளக்கம் அளிக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.