த.வெ.க கொடியை தடை செய்ய வேண்டிய மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது
சிவப்பு – மஞ்சள் – சிவப்பு நிறத்தில் உள்ள கொடியைப் பயன்படுத்துவதற்கு த.வெ.க. மீது இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனத் தலைவர் பச்சையப்பன் தாக்கல் செய்த மனுவில், அவர்களது சபைக்கான வணிகச் சின்னமாக சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறக் கொடி பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதே நிறத் தொகுப்பில் த.வெ.க. பயன்படுத்தும் கொடி, வணிகச் சின்னச் சட்டத்தையும், பதிப்புரிமைச் சட்டத்தையும் மீறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இரு கொடிகளும் ஒரே மாதிரி இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் உருவாகும் அபாயம் உள்ளதால், த.வெ.க. கொடியைத் தடை செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.
இதற்கு எதிராக த.வெ.க. தரப்பில், மனுதாரர் சபையோ அல்லது த.வெ.க.வோ எந்தவித வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை என்பதால், கொடியின் உரிமை கோர முடியாது என வாதிடப்பட்டது. மேலும், த.வெ.க. கொடி, மனுதாரர் சபை கொடியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும், த.வெ.க. கொடியால் எவ்வித இழப்பும் ஏற்பட்டதாக மனுதாரர் நிரூபிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பின் வாதங்களையும் கவனித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இரு கொடிகளையும் ஒப்பிடும் போது, மனுதாரர் சபையின் கொடியை த.வெ.க. பயன்படுத்தியதாகக் கூற முடியாது என்றும், த.வெ.க. கொடியால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தீர்மானித்தார்.
இதனால், த.வெ.க.வின் கொடி பயன்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.