சாலைகளில் விளம்பர தடுப்புகள் – அகற்ற கோரிய வழக்கு: நெடுஞ்சாலைத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் விளம்பரங்களுடன் பொருத்தப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகள் விளக்கம் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த அழகேசன், மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதையும், அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தடுப்புகள் மற்றும் விளம்பரங்கள்
பொதுவாக போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், அவசர சூழ்நிலைகளில் வழித்தட மாற்றங்களை ஏற்படுத்தவும் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் வைக்கப்படுகின்றன. அவற்றில் தனியார் விளம்பரங்கள் இடம்பெறக் கூடாது. ஆனால், தற்போது மாநிலம் முழுவதும் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பல தடுப்புகளில் தனியார் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
எனவே, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் விளம்பரங்களுடன் உள்ள தடுப்புகளை அகற்றவும், அவை சரியான அளவில் வைக்கப்படுவதையும், எதிரே வரும் வாகனங்களைத் தெளிவாக காணும் வகையில் இருக்க வேண்டியதையும் உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய நெடுஞ்சாலைத் துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.