விநாயகர் சதுர்த்தி – சென்னையில் சிலைகள் அமைப்பதற்கான 11 விதிமுறைகள் அறிவிப்பு
வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் சிலைகள் வைக்கும் தொடர்பாக 11 கட்டுப்பாடுகளை சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. வழக்கம்போல, விழா நாளில் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் அவை 30 மற்றும் 31ஆம் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், இந்து அமைப்புகள் நிர்வாகிகளுடன் காவல் கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), பிரவேஷ்குமார் (வடக்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து) உள்ளிட்டோர் கலந்தாய்வு நடத்தினர்.
இந்த கூட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாஜக, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
காவல் துறை விதித்த முக்கிய கட்டுப்பாடுகள்:
- சிலைகள் வைக்கப்படும் இடம் தொடர்பாக நில உரிமையாளர்களின் அனுமதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையின் அனுமதி பெறப்பட வேண்டும்.
- மின்வாரியம், தீயணைப்பு துறை ஆகியவற்றிடமிருந்து தடையற்ற சான்று (NOC) பெறப்பட வேண்டும்.
- சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் அனுமதி பெறுதல் கட்டாயம்.
- நிறுவப்படும் சிலையின் உயரம் மேடை உள்பட 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
- கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் அருகே சிலைகள் வைக்கப்படக் கூடாது.
இவ்வாறு மொத்தம் 11 கட்டுப்பாடுகளை சென்னை காவல் துறை விதித்து, அவற்றை கடைப்பிடிக்குமாறு அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.