தமிழகம் முழுவதும் பரவும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் என உழைப்போர் உரிமை இயக்கம் அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்க ஆலோசகர், வழக்கறிஞர் குமாரசாமி,
“13 நாட்களாக அமைதியான முறையில் போராடிய தூய்மை பணியாளர்களை பொது நல வழக்கு என்ற பெயரில் காவல்துறையை பயன்படுத்தி கலைத்தனர். எங்கள் போராட்டம் இங்கு முடிவடையவில்லை. இது தொடரும்.
காவல்துறையிடம் போராட்ட அனுமதி கோரி மனு அளித்துள்ளோம். அனுமதி வழங்கப்படவில்லை எனில், அதற்கெதிராகவே போராட வேண்டிய நிலை வரும். காவல்துறை தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடக்குமா அல்லது நீதிமன்ற உத்தரவுப்படி எங்களுக்கு சாதகமாக செயல்படுமா என்பதை காத்திருந்து பார்ப்போம். தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடக்கின்றன. இது மேலும் வலுவடையும்” என்றார்.
மேலும் அவர், “திருமாவளவன் எந்த நோக்கத்துடன் கருத்து தெரிவித்தார் என்பது தெளிவில்லை. தவறான நோக்கத்தில் அவர் பேசியிருக்க மாட்டார். அவரின் ஆதரவு எங்களுக்குத் தேவை. மனிதர்களை வைத்து குப்பை அகற்றுவதை நிறுத்தி, இயந்திரங்கள் அல்லது ரோபோக்கள் மூலம் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தால் அதனை நாங்கள் வரவேற்போம். ஆனால் மனிதர்களை வைத்து குப்பை அகற்றும் வரை, பணியாளர்களுக்கு நிரந்தர வேலை, பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
மாவட்டங்களிலான போராட்டங்கள்
நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க கோரியும், சென்னையில் நடந்த போராட்டத்தில் காவல்துறை தாக்குதலை கண்டித்தும், தொழிலாளர்களிடமிருந்து பிடித்த இபிஎப் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் கோரியபடி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி: மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஊதியம் வழங்கப்பட வேண்டும், அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், பணிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மழையிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை: மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தனியார்மய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, அரசாணைகள் 152 மற்றும் 139 ரத்து செய்யப்பட வேண்டும். மாநகராட்சி ஒப்பந்த தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். தீபாவளி போனஸாக ஒரு மாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோஷங்கள் எழுப்பினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.
நாமக்கல்: தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிஐடியு சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி, கைது செய்தது தவறு. வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
திருப்பூர்: தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தனியார் மயத்தை கைவிட வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை பின்பற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஒப்பந்த நிறுவனங்களின் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சேலம்: காவல்துறையினர் நடத்திய அடக்குமுறைக்கு எதிராக, சிஐடியு சேலம் மாவட்ட குழுவினர் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை தாக்கிய காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் மயத்தை கைவிட வேண்டும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.