இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

எல்லை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 2 மாதங்களில் 64 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு, ஆறு மாதம், ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற 24 பேர் தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீண்டும் வழங்கவும், இந்தியா–இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை வழங்கவும் கோரி ஆகஸ்ட் 11 முதல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 13 அன்று கண்டன ஆர்ப்பாட்டமும், ஆகஸ்ட் 15 அன்று உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மீனவர்கள் தங்கக்சிமடம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box