அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிகத் தடை
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 2006–11 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ரூ.2 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து 2012ல், அவர், அவரது மனைவி சுசீலா, மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ மற்றும் மற்றொரு மகன் ஐ.பி.பிரபு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நால்வரையும் விடுவித்தது.
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், திண்டுக்கல் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, வழக்கை மீண்டும் தினசரி விசாரணை நடத்தி 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், “அரசியல் பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையின் ஆவணங்களில் சொத்து குவிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. குடும்பத்தின் வருவாய் தவறாக கணக்கிடப்பட்டதால், சிறப்பு நீதிமன்றம் விடுதலை அளித்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்தது சட்டப்படி தவறு. மேலும், ஆளுநரிடம் அனுமதி பெறாமல் சட்டப்பேரவைத் தலைவரிடம் அனுமதி பெறப்பட்டது நடைமுறை தவறு. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.” எனக் கூறப்பட்டது.
நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி தலைமையிலான அமர்வில் இந்த மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வி.கிரி, முத்துகணேச பாண்டியன், மாளவிகா ஜெயந்த் ஆகியோர் வாதிட்டனர்.
விசாரணை முடிவில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்தது. மேலும், தமிழக அரசு இந்த வழக்கில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பான ஐ.பெரியசாமி தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுவுடன், இவ்வழக்கையும் இணைத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.