தீபாவளி முன்பதிவு பரபரப்பு: தென் மாவட்ட ரயில்களில் மூன்றரை நிமிடங்களில் டிக்கெட் முடிந்தது

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து அக்டோபர் 17ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்களுக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. ஆனால், பாண்டியன், பொதிகை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான முக்கிய ரயில்களில், டிக்கெட்டுகள் மூன்றரை நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து, உடனடியாக காத்திருப்போர் பட்டியல் காட்டப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வாண்டு தீபாவளி அக்டோபர் 20ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கும். அதன்படி பண்டிகைக்கு நான்கு நாட்கள் முன் புறப்படும் ரயில்களுக்கு முன்பதிவு நேற்று முன்தினமே தொடங்கப்பட்டது.

சென்னையில் இருந்து அக்டோபர் 17ஆம் தேதி புறப்படும் ரயில்களுக்கு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாக டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

முக்கிய விரைவு ரயில்களின் 2வது வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில், சில நிமிடங்களுக்குள் டிக்கெட்டுகள் முடிந்து காத்திருப்போர் பட்டியல் காண்பிக்கப்பட்டது. குறிப்பாக, பாண்டியன், பொதிகை, நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி போன்ற ரயில்களில் மூன்றரை நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. காலை 8.15 மணிக்குள் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு நிறைவடைந்து, பின்னர் “ரெக்ரெட்” நிலை வந்துவிட்டது.

மேலும், சென்னையில் இருந்து மேற்குத் திசையில் புறப்படும் சேரன், நீலகிரி போன்ற ரயில்களிலும் இதே நிலை நிலவியது. இந்த ரயில்களின் 2வது வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் முன்பதிவு உடனடியாக முடிந்து, சில மணி நேரங்களுக்குள் “ரெக்ரெட்” நிலை எட்டியது. ஏசிசி வகுப்பு டிக்கெட்டுகளும் விரைவில் நிறைவடைந்தன.

சனி, ஞாயிறு விடுமுறையுடன் தீபாவளிக்காக ஊருக்கு செல்லத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள், கவுன்டர்களில் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்த போதிலும், சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Facebook Comments Box