சென்னை காவல்துறை – 60+ வயதானவர்களுக்கு உதவி மையம்!

முதியோர்களுக்கு உதவ, சென்னை காவல்துறை சிறப்பு உதவி மையம் ஒன்றை அமைத்துள்ளது. குறிப்பாக பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக, சென்னை காவல்துறையில் ‘1252’ என்ற எண்ணின் கீழ் முதியோர் உதவி மையம் செயல்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உதவ ‘பந்தம்’ எனும் சேவை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. எனது வழிகாட்டுதலின் பேரில் இந்தத் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

இந்தத் திட்டம் மூலம், 94999 57575 என்ற செல்போன் எணுக்கு அழைத்து உதவி கேட்கும் முதியோர்களுக்கு உடனடியாக போலீஸார் உதவி செய்கின்றனர். பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிப்பதால் தனியாக வாழும் முதியோர்கள், வாரிசு இல்லாதோர், பிள்ளைகளால் கைவிடப்பட்டோர் ஆகியோரின் அழைப்புகள் முன்னுரிமையாக கருதப்படுகின்றன. இவர்களுக்கு மருத்துவம், பாதுகாப்பு, ஆலோசனை, சட்ட உதவி உள்ளிட்ட வசதிகளை போலீஸார் செய்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு இதுவரை ‘பந்தம்’ உதவி மையம் 185 சட்டரீதியான பிரச்சினைகள், 6 மருத்துவ உதவிகள், 5 பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உதவிகள் மற்றும் 41 அத்தியாவசிய தேவைகளுக்கான உதவிகளை செய்துள்ளது. மேலும் 954 பேருக்கு தகவல் மற்றும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,191 அழைப்புகள் 72 மணி நேரத்துக்குள் தீர்க்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை காவல்துறையின் ‘காவல் கரங்கள்’ உதவி மையத்தின் மூலம் இதுவரை 646 ஆதரவற்ற முதியவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 117 பேரின் முகவரிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box