பொன்முடியின் பேச்சு அவருடைய சொந்த கருத்து அல்ல: அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம்–வைணவத்தை பெண்களுடன் தொடர்புபடுத்தி பேசிய உரைக்கு எதிராக அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த பேச்சின் காரணமாகவே அவர் தனது பதவியை இழந்தார். இதற்கெதிராக 140-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீஸில் பதிவு செய்யப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டார். பின்னர், இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, “பொன்முடிக்கு எதிராக வந்த அனைத்து புகார்களும் விசாரிக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டன” என்று கூறிய அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதற்கு நீதிபதி, “இந்த புகார்களில் வழக்குப் பதிவு செய்ய ஆதாரம் இல்லை என போலீஸார் எவ்வாறு தீர்மானித்தனர்? இந்த புகார்கள் வேகமாக முடிக்கப்பட்டது போலவே, மற்ற புகார்களிலும் அதே வேகத்தை காட்டுவார்களா?” எனக் கேட்டார்.

அப்போது புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, “புகார்தாரர்களுக்கு தெரிவிக்காமலேயே புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன” என வாதிட்டார்.

அதற்கு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “போலீஸார் புகார்களை முடித்து வைத்ததை எதிர்த்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார்தாரர்கள் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். மேலும், பொன்முடி கூறிய கருத்து அவர் சொந்தமாகச் சொன்னது அல்ல. 1972-ஆம் ஆண்டு ஒரு சமூக சீர்திருத்தவாதி கூறிய கருத்தையே அவர் மேற்கோள் காட்டி உரையாற்றினார்” என்றார்.

இதையடுத்து நீதிபதி, “சைவம், வைணவம் மற்றும் பெண்களைப் பற்றிப் பொன்முடி பேசிய முழு வீடியோவும், அவர் மேற்கோள் காட்டியதாக கூறப்படும் 1972-ஆம் ஆண்டின் ஆதாரமும் அரசு தரப்பால் தாக்கல் செய்யப்பட வேண்டும்” என உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை ஆகஸ்ட் 28-க்கு ஒத்திவைத்தார்.

Facebook Comments Box