விநாயகர் சதுர்த்தி விழா: முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி மின்னஞ்சல் அழைப்பு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்க, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்து முன்னணி மின்னஞ்சல் மூலம் அழைப்பு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“நம்ம சாமி – நம்ம கோயில் – நாமே பாதுகாப்போம்” என்ற தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 15 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இம்முறை அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என அவருக்கு இந்து முன்னணி சார்பில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். ரம்ஜானுக்கு அரசு பல ஆயிரம் டன் அரிசி வழங்குகிறது. அதுபோல, விநாயகர் சதுர்த்தி அனைத்து இந்து குடும்பங்களும் கொண்டாடும் வகையில், குறைந்தது அரை அடி அளவில் விநாயகர் சிலைகளை அரசு வழங்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்க சில தரப்புகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நமது தேசம் சுதந்திரம் அடைய காரணமே விநாயகர் சதுர்த்தி போராட்டம் தான். தமிழக இந்துக்களை ஒன்றிணைப்பதற்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது.
ரசாயனப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், திருப்பூரில் நடைபெறும் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கிறார். மேட்டுப்பாளையத்தில் நடிகர் ரஞ்சித், கோவையில் அண்ணாமலை, மதுரையில் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.