75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்தும் முயற்சி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
சுமார் 75 டன் எடையுடைய செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தும் நோக்கில், 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாராயணனுக்கு, மாநில ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டினார்.
அதன்பின் உரையாற்றிய நாராயணன் கூறியதாவது:
- இந்த ஆண்டுக்குள், இந்திய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- அதோடு, தொழில்நுட்ப செயல்பாட்டு விளக்கச் செயற்கைக்கோள் (TDS) மற்றும் ஜிசாட்-7ஆர் என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது.
- தற்போதைய ஜிசாட்-7 (ருக்மிணி) செயற்கைக்கோளுக்கு மாற்றாக, இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக ஜிசாட்-7ஆர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் உருவாக்கிய முதல் ராக்கெட் 17 டன் எடையுடையது. அது 35 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டிருந்தது.
- ஆனால் இப்போது, 75,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை தாழ்வான சுற்றுவட்டப் பாதையில் செலுத்தக் கூடிய ராக்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது.
- அந்த ராக்கெட் 40 மாடி கட்டிடம் உயரம் கொண்டதாக இருக்கும்.
- தற்போது இந்தியாவின் 55 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் செயல்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை அடுத்த 3–4 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும்.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box