முதல்வர் ஸ்டாலின் : மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதி

மாநில உரிமைகள் எவ்விதத்திலும் பறிக்கப்படக் கூடாது என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. பல துறைகளில் முன்னணியில் இருந்தாலும், ஒன்றிய அரசு குறுகிய மனப்பான்மையோடு செயல்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஒன்றிய–மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பலருக்கும் பயனளித்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் 4.5 ஆண்டுகளில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலம் தமிழ்நாடு என்றாலும், ஒன்றிய அரசு பகிர்வை விட அதிகார குவிப்பிலேயே உள்ளது.

நிதி பற்றாக்குறையிலும் வளர்ச்சி குறியீடு இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசாக திமுக செயல்படுகிறது. தமிழக அரசு அதிக வருவாய் ஈட்டினாலும், மத்திய அரசு தரும் நிதி மாநில வரி வருவாய்க்கு ஒப்பாக இல்லை. பல்வேறு தடைகளை தாண்டியும் தமிழ்நாடு முன்னேற்றத்தை கண்டுள்ளது.

தமிழகத்தில் எழுந்த மாநில சுயாட்சி என்ற முழக்கம் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு சட்ட, நிர்வாக குறுக்கீடுகள் மூலம் ஒன்றிய அரசு இடையூறு செய்கிறது. நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதைத் தடுக்கிறது; மாநிலங்களுக்கு உரிய பங்கீட்டை மறுக்கிறது.

மேலும், இந்தி திணிப்பில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது. அதை முறியடிக்க தமிழக மக்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் போராடியுள்ளனர். இதன் விளைவாகவே 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா, இருமொழிக் கொள்கையை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் என முதல்வர் குறிப்பிட்டார்.

Facebook Comments Box