6,000 செவிலியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பும் முடிவுக்கு எதிர்ப்பு
நோய் தடுப்பு மருந்துத் துறையில் கடந்த 3 ஆண்டுகளாக காலியாக உள்ள 6,000 செவிலியர் பணியிடங்களை நிரந்தரமாகவே நிரப்ப வேண்டும், தொகுப்பூதிய முறையில் நியமிக்கக் கூடாது என அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கிராம சுகாதார செவிலியர், ஆரம்ப சுகாதார நிலைய தாய்மை நல துணை செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், சமுதாய நல செவிலியர் ஆகியோர் தாய்-சேய் நலம், தடுப்பூசி செலுத்துதல், சிறுநோய் சிகிச்சை, குடும்ப நலப் பணி போன்ற பொறுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், கூடுதல் பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
2022 மே மாதம் கும்பகோணத்தில் நடைபெற்ற செவிலியர்கள் மாநாட்டில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. எனவே, பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத் தலைவர் இந்திரா கூறியதாவது:
- தமிழகத்தில் 6,000 காலிப்பணியிடங்கள் உள்ளன.
- ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு நான்கு கட்ட பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண் செவிலியர்களுக்கென இருந்த மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பதவி நீக்கப்பட்டு, பி.எஸ்.சி நர்சிங் படித்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2016-ஆம் ஆண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டபோது, அந்தப் பதவிகள் ஆண்கள்–பெண்கள் தலா 50 சதவீதம் என பிரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒன்பது ஆண்டுகளாக நடைமுறைக்கு வரவில்லை.
- ஊதியத்திலும், பதவி உயர்விலும் பாலின பாகுபாடு தொடர்கிறது.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து நீக்கப்பட்ட தாய்மை நல செவிலியர் பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். தற்போது ஒருவரே ஐந்து பேருக்கான பணிகளைச் செய்து வருவதால் மிகுந்த சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2022 ஜனவரியில் திமுக அரசு உயர்நிலை குழுவை அமைத்து, மார்ச் மாதத்தில் அறிக்கையைப் பெற்றும், மூன்று ஆண்டுகளாக அதற்கான நிலை குறித்து எவ்வித தகவலும் இல்லை.
எனவே, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், தொகுப்பூதியத்தில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை ரத்து செய்யவும், மூத்த செவிலியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கவும் வேண்டும். இல்லாவிட்டால், செவிலியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் இணைந்து, பணிகளை புறக்கணித்து கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் எச்சரித்தார்.