போக்குவரத்து ஓய்வுபெற்றோருக்கு ரூ.1,137 கோடி நிதி ஒதுக்கீடு

ஓய்வுபெற்றோர் நிலுவைத் தொகை வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு இடைக்கால கடனாக தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பிற அரசுத் துறை ஊழியர்கள் போலவே ஓய்வுநாளில் உடனடி நிதி பெறுவதில்லை.

அதன்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து 2023 ஜூலை மாதத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இன்றுவரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் சிஐடியு சார்பில் சமீபத்தில் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

2023 ஜூலை மாதம் முதல் 2024 ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களும், பணிக் காலத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் நிலுவைத் தொகை பெறுவதற்காக நிதி உதவி கோரி போக்குவரத்துத் துறை தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதை ஆராய்ந்த அரசு, ரூ.1,137.97 கோடியை இடைக்கால கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box