பிரச்சாரக் கூட்டங்களில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டுநரே நோயாளியாக அனுப்பப்படுவார்: இபிஎஸ் எச்சரிக்கை
அணைக்கட்டு தொகுதியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசும்போது, நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், “அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டுநரே நோயாளியாக அனுப்பப்படுவார்” என்று எச்சரித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் நடைபெற்ற “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தில், பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அருகில் உள்ள தெருவில் இருந்து சைரன் ஒலியுடன் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதில் நோயாளி இல்லாததை கண்ட அதிமுக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், பழனிசாமி,
“ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோல் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி மக்கள் சிரமப்படுவதை அரசு செய்கிறது. நேரில் எதிர்க்க முடியாதவர்கள் இப்படிப் பண்றாங்க. அந்த ஆம்புலன்ஸ் எண், ஓட்டுநரின் பெயர் எல்லாம் குறித்துக்கொண்டு காவல்துறைக்கு புகார் செய்யுங்கள். அடுத்த முறை வேண்டுமென்றே வந்தால், ஓட்டுநரே நோயாளியாக அனுப்பப்படுவார்” என்றார்.
அதே நேரத்தில் அவர், “அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. உயர்கல்வி படிப்போர் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற சாதனையை உருவாக்கியது” என்றும் தெரிவித்தார்.
‘108’ நிர்வாக விளக்கம்:
“அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் வயிற்றுப் பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது சந்திரா என்ற மூதாட்டியை, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு இரவு 9.45 மணிக்கு தகவல் வழங்கப்பட்டது.
ஓட்டுநர் சுரேந்தர் இரவு 10.20 மணியளவில் அதிமுக கூட்டம் வழியாக வந்தபோது இந்த பிரச்சினை ஏற்பட்டது. பின்னர், அவர் நோயாளியை 12.30 மணிக்கு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தார். காவல்துறையினர் கூட்டம் காரணமாக சுமார் 40 நிமிடங்கள் காத்திருக்க வைத்தனர். இதனால் தாமதம் ஏற்பட்டது” என்று தெரிவித்தது.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்து:
“எங்கு விபத்து நடந்தாலும் 8-10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் செல்ல வேண்டும். அதை தடுக்காமல், மருத்துவ பணியாளரை மிரட்டுவது முன்னாள் முதல்வருக்கு ஏற்றது அல்ல. இதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.