குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கோரி அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ் – ஆகஸ்ட் 31க்குள் பதில் அளிக்க வேண்டும்
கட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, ஆகஸ்ட் 31க்குள் விளக்கம் தருமாறு அன்புமணிக்கு ராமதாஸ் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் அன்புமணி நடத்திய பொதுக்குழுக் கூட்டத்தில், அவரின் தலைவர் பதவியை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதி புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் ராமதாஸ் நடத்திய மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், பாமக தலைவராக நிறுவனர் ராமதாஸே செயல்படுவார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவற்றை ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்புமாறு கட்சியின் கவுரவத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் பேரில், நேற்று தைலாபுரத்தில் நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அமைப்பு செயலாளர் மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தில், குற்றச்சாட்டுகளுக்கான விளக்கமும் தொடர்புடைய ஆவணங்களையும் ஆகஸ்ட் 31க்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள் விளக்கம்:
கூட்டத்துக்குப் பின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரும் சேலம் மேற்கு எம்எல்ஏவுமான அருள்,
“பாமக விதிகளின்படி நிரந்தரமானவர் நிறுவனர் ராமதாஸே. வழக்கறிஞர் பாலு கூறும் தகவல்கள் தவறானவை. ஆகஸ்ட் 31க்குள் அன்புமணி விளக்கம் அளிக்கத் தவறினால், ஒழுங்கு நடவடிக்கை குழு அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து ராமதாஸுக்கு பரிந்துரை செய்யும். இறுதி முடிவை ராமதாஸ் எடுப்பார். உண்மை நிலையை அறிந்தால், அன்புமணி ராமதாஸை சந்திக்க முன்வருவார்” என்றார்.
அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்:
- புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸுக்கு எதிராக பேசி, மைக்கை தூக்கி வீசியது.
- பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கியதாக கூறி கட்சியை பிளவுபடுத்தியது.
- சமூக வலைதளங்களில், சிலரின் மூலம் ராமதாஸுக்கு எதிராக கருத்துகள் பதிவானது.
- பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ளாமல் புறக்கணித்தது.
- தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.
- ராமதாஸ் அனுமதியின்றி பொதுக்குழுக் கூட்டம் நடத்தியது.
- “உரிமை மீட்பு” என்ற பெயரில் பயணம் மேற்கொண்டது.
- ராமதாஸிடம் பேசாமலேயே “40 முறை பேசியேன்” என்று பொய் பரப்பியது.
இதனைத் தவிர மொத்தம் 16 குற்றச்சாட்டுகள் அன்புமணிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.