குற்றச்சாட்டுகளில் நேரடி சாட்சி வழங்கும் குழந்தைகளுக்கு மனநல சிகிச்சை வழங்க கமிட்டி: அரசு தகவல்

குற்றச்சாட்டுகளில் நேரில் சம்பவங்களை சந்தித்த சாட்சிகளாக இருக்கும் குழந்தைகளுக்கு மனநல ரீதியான சிகிச்சை வழங்க மாநில அளவில் விரைவில் ஒரு கமிட்டி அமைக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவையில் 5 வயது சிறுமியின் கண் முன்னிலையில், அவரது தாயை கொடூரமாக கொலை செய்து எரித்த குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அந்த தண்டனைக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் உட்பட அமர்வில் நடைபெற்று வருகிறது.

மனுதாரர் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அபுதுகுமார் ராஜரத்தினம், இதுபோன்ற சிக்கலான வழக்குகளில், கொலை சம்பவங்களை நேரில் பார்த்த முக்கிய சாட்சிகளாக இருக்கும் குழந்தைகளுக்கு மனநல ரீதியான ஆலோசனை, சிகிச்சை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இதன் பின்னர், நீதிபதிகள் தமிழக அரசுக்கு இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்படி, வழக்கு நேற்று மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழக டிஜிபி சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், “மாநிலம் முழுவதும் கொலை போன்ற முக்கிய குற்ற வழக்குகளில் குழந்தைகள் சாட்சிகளாக உள்ள வழக்குகள் 161. ஆவடி காவல் ஆணையரகக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் 25, ராமநாதபுரம் மாவட்டத்தில் 21, கோவை மாவட்டத்தில் 13 மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 வழக்குகள் உள்ளன.

சாட்சிகளாக இருக்கும் குழந்தைகளுக்கு மனநல மற்றும் உளவியல் சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற வழக்குகளை விசாரிக்கும் டிஐஜி, பள்ளிக்கல்வித் துறையின் என்எஸ்எஸ் இணை இயக்குநர், குழந்தைகள் நலத்துறை துணை இயக்குநர், சமூக நலத்துறை திட்ட மேலாண்மை மூத்த ஆலோசகர், குழந்தைகள் நலத்துறை அதிகாரி மற்றும் மனநலம், உளவியல் சிகிச்சை நிபுணர்கள் இணைந்த கமிட்டி விரைவில் அமைக்கப்பட உள்ளது.

இந்த கமிட்டி விதிமுறைகளை வகுக்கும் வரை, குற்ற வழக்குகளில் சாட்சிகளாக இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டது.

இதன்பின், நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Facebook Comments Box