கன்யாகுமரி போலீஸார் தீவிர விசாரணை – தேவாலயத்தில் சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ பாடல் ஒலிபரப்பு?

தேசிய கீதத்தின் மெட்டில் கிறிஸ்தவ மதப்பிரச்சார பாடல் ஒலிபரப்பானதாக கூறப்படும் வீடியோவின் உண்மை குறித்து குமரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி, கன்யாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் கிறிஸ்தவ ஆலயங்களில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் தேசியக் கொடியேற்றம் வழக்கமாக நடைபெறுகிறது. இவற்றில் சிஎஸ்ஐ உட்பட சில பிரிவு ஆலயங்களில், தேசிய கீதத்திற்கு பதிலாக அதே மெட்டில் கிறிஸ்தவப் பாடல் பாடப்படுவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் தேசியக் கொடி ஏற்றிய பின், தேசிய கீதத்தின் மெட்டில் கிறிஸ்தவப் பாடல் பாடப்படும் காட்சி இடம்பெற்றதாக கூறப்படும் வீடியோ, கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வீடியோவில் அந்த நிகழ்வு நாகர்கோவிலில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து குமரி போலீஸாரும் உளவுத்துறையும் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார் கூறியதாவது:

“நாகர்கோவிலில் நடந்ததாக பரவிவரும் வீடியோவில், கிறிஸ்தவ பாதிரியாரும் பொதுமக்களும் தேசிய கீத மெட்டில் பாடலைப் பாடி கொடியேற்றுவது தெரிகிறது. பாடல் வீடியோவில் எடிட் செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக சைபர் கிரைம் பிரிவு போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்” என்றனர்.

அதே சமயம், வீடியோவில் இந்து அமைப்பின் பெயரிலான ‘லோகோ’ இடம் பெற்றிருப்பதும், சுதந்திர தின இரவே அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதும் போலீஸாரின் கவனத்துக்கு வந்துள்ளது. வீடியோ வெளியிட்டவரை கண்டறிந்து உண்மை நிலையை உறுதிப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து திருநெல்வேலி வழக்கறிஞர் அ. பிரம்மா கூறியதாவது:

“தேசியக் கொடியை ஏற்றி வைக்கும்போது தேசிய கீதத்தை பாடாமல் மரியாதை செலுத்துவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய கீத இசையை மத நோக்கில் பயன்படுத்துவது, அல்லது கொடியேற்ற விழாவில் பாடுவது, அதிகாரப்பூர்வ தேசிய கீதத்தை மாற்றிப் பயன்படுத்தும் செயலாக கருதப்படும். அது அவமதிப்பாகவே பார்க்கப்படும்.

தேசியக் கொடியை ஏற்றும் நேரத்தில் அரசு அங்கீகரித்த தேசிய கீதமே பாடப்பட வேண்டும். வேறு பாடல்களை அதற்குப் பதிலாகப் பாடக்கூடாது. தேசிய கீதத்தை வேறு மெட்டில் பாடினாலும், அது தேசியக் கொடியின் மரியாதை விதிமுறையை மீறுவதாகக் கருதப்படும்” என்றார்.

Facebook Comments Box