வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு நியமன ஆணை – முதல்வர் வழங்கினார்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 379 பேரும், கருணை அடிப்படையில் நியமனம் பெற்ற 33 பேரும் உள்பட மொத்தம் 412 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
வேளாண்மைத் துறை
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 169 பேருக்கும், மேலும் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர், காவலர் போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட 33 பேருக்கும் நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு முதல்வர் நேரடியாக ஆணைகள் வழங்கினார்.
நெடுஞ்சாலை & பொதுப்பணித்துறை
நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கும், பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளர் (சிவில், மின்) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 165 பேருக்கும் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் நா. முருகானந்தம், பல துறைச் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.