ஒடிசா பெண்ணுக்கு பிரசவ உதவி செய்த பெண் காவலருக்கு டிஜிபி பாராட்டு

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திடீர் பிரசவ வலி ஏற்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, அங்கு பணியில் இருந்த பெண் காவலர் உடனடியாக முதல் உதவி செய்து, குழந்தை பிறக்க உதவினார். இந்த செயலுக்காக டிஜிபி சங்கர் ஜிவால் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் காவல் நிலைய போலீஸார் ஆகஸ்ட் 16ஆம் தேதி வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், ஆயுதப்படை பெண் காவலர் கோகிலாவும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பாதையில் வந்த ஆட்டோவில், ஒடிசாவைச் சேர்ந்த பாரதி (25) என்ற கர்ப்பிணிப் பெண் கணவருடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆட்டோவில் பயணம் செய்த அந்தப் பெண் திடீரென கடுமையான பிரசவ வலியால் அவதிப்பட, காவலர் கோகிலா உடனே உதவிக்காக ஆட்டோவில் ஏறினார். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே, அந்தப் பெண்ணுக்கு பிரசவிக்க கோகிலா நேரடியாக உதவி செய்தார்.

பின்னர் தாய் மற்றும் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை இருவரும் பாதுகாப்பாக திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காவலர் கோகிலா முன்பு நர்சிங் பயிற்சி பெற்றிருந்தது இந்நிகழ்வில் பெரிதும் உதவியாக இருந்தது.

இந்தச் செயலுக்கு பாராட்டாக, டிஜிபி சங்கர் ஜிவால் அவரை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Facebook Comments Box