திருச்சியில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு – திருவெறும்பூரில் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன

திருச்சியில் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தின் கீழ், குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் சுமார் 25 கோடி குடும்பங்கள் சமையல் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல்கள் இருப்பதோடு, டெலிவரி ஊழியர்கள் கூடுதல் தொகை வசூலிக்கிறார்கள் என்ற புகார்களும் அடிக்கடி எழுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், எண்ணெய் நிறுவனங்கள் வீட்டிற்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

மும்பை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் ஏற்கனவே குழாய் மூலம் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக சென்னை நகரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, திருச்சியிலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிலையத்திலிருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு, வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் திருவெறும்பூர் பகுதியில் மட்டும் 50 குழுக்களில் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

முதற்கட்டமாக திருவெறும்பூர் காட்டூரில் சில வீடுகளுக்கு சோதனை அடிப்படையில் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், நுகர்வோர் இனி சிலிண்டர் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், நேரமும் செலவும் மிச்சமாகும் என்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குழாய் மூலம் இணைப்பை பெறும் அனைவருக்கும் முழுமையான சேவைகள் செல்போன் செயலி மூலம் வழங்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவது, புகார் அளிப்பது போன்ற அனைத்தும் ஆன்லைன் முறையில் சாத்தியமாகும்.

எல்பிஜி – பிஎன்ஜி வித்தியாசம் :

வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களில் எல்பிஜி (Liquefied Petroleum Gas) உள்ளது. ஆனால் குழாய்களில் விநியோகிக்கப்படுவது பிஎன்ஜி (Piped Natural Gas).

  • எல்பிஜி அதிக அடர்த்தி கொண்டது; கசிந்தால் தரையில் தங்கிவிடும்.
  • பிஎன்ஜி குறைந்த அடர்த்தி கொண்டதால், காற்றில் கலந்து விரைவில் வெளியேறிவிடும் – இதனால் விபத்து அபாயம் குறைவு.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், பாதுகாப்பானதும் பிஎன்ஜி.
  • எல்பிஜிக்கு எடைக்கேற்ப பணம் செலுத்த வேண்டும்; பிஎன்ஜிக்கு பயன்படுத்திய சக்திக்கேற்ப (மின்கட்டணத்தைப் போல) பணம் செலுத்தினால் போதுமானது.
Facebook Comments Box