“இந்தியாவை சர்வாதிகார ஆட்சியாக்கும் முயற்சி!” – பதவிநீக்க மசோதாவை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்
பிரதமரின் கீழ் முழுமையான சர்வாதிகார நாட்டாக இந்தியாவை மாற்ற முயற்சி செய்வதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசியலமைப்பையும் மக்களாட்சியின் அடித்தளத்தையும் முற்றிலும் சீர்குலைக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்ததாவது:
- “130-வது அரசியல் சட்டத் திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; இது வரலாற்றிலேயே கரும்பக்கமாக நிற்கும் நாள். இது கொடுஞ்சட்டம்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை, எந்த நீதிமன்ற தீர்ப்பும் இல்லாமல், 30 நாள் சிறைத் தண்டனைக்கு அடிப்படையில் பதவி நீக்கம் செய்யலாம் என்ற பிரிவை கொண்டு வந்துள்ளனர்.
- பாஜக சொன்னதுதான் சட்டம், வாக்குகளை திருடு, எதிரிகளை ஒடுக்கி மவுனப்படுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைத்து விடு – எல்லா சர்வாதிகாரமும் இப்படித்தான் தொடங்குகிறது.
மக்களாட்சியின் வேரையே வெட்டும் இந்தச் சட்டத்தை நான் தீவிரமாக கண்டிக்கிறேன். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற நினைக்கும் இந்தக் கொடுங்கோன்மைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அழைக்கிறேன்.
வாக்குத் திருட்டு அம்பலமானதால், பாஜக அரசு அமைந்த விதமே சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இன்றைய பாஜக அரசு சட்டப்படி உருவானதா என்பது கேள்விக்குறி. மக்களின் கவனத்தை விலக்குவதற்காகவே இந்த 130-வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இதன் நோக்கம் தெளிவானது – பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை பொய் வழக்குகளால் சிக்கவைத்து, எந்த விசாரணையும் இல்லாமல், 30 நாள் சிறைத் தண்டனையின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்வதற்கு வழிவகுப்பதே.
குற்றம் என்பது நீதிமன்ற விசாரணை முடிவில் மட்டுமே தீர்மானிக்கப்படும். வெறும் வழக்கு பதிவு குற்றம் அல்ல. ஆகவே, அரசியலமைப்புக்கு முரணான இந்தத் திருத்தம் நீதிமன்றங்களில் நிராகரிக்கப்படும் என்பது உறுதி. மேலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை “எங்களுடன் இணைந்திருங்கள், இல்லையெனில் பதவியை இழப்பீர்கள்” என்று அச்சுறுத்தும் நோக்கத்தோடும் இந்த முயற்சி உள்ளது.
சர்வாதிகாரிகள் முதலில் செய்வது, தங்கள் எதிரிகளை கைது செய்து பதவியிலிருந்து அகற்றும் அதிகாரத்தை தமக்கே வழங்கிக் கொள்வதே. அதைத்தான் இந்த மசோதா செய்யப் போகிறது,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.