ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறவுள்ள ‘மரங்களின் மாநாடு’ இடத்தை பார்வையிட்ட சீமான்!
நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் கிராமத்தில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ‘மரங்களின் மாநாடு’ நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை இன்று கட்சித் தலைவர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை ஏற்பாட்டில், “மரங்களோடு உரையாடுவோம்; மரங்களுக்காக உரக்கப் பேசுவோம்” என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டம் அருங்குளம் கிராமத்தில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் தோட்டம் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இன்று அந்த இடத்தை பார்வையிட்ட சீமான், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு, அங்கிருந்த மரங்களை அன்புடன் கட்டித் தழுவி, முத்தமிட்டு, அவற்றோடு உரையாடினார். சீமான் மரங்களை அணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.