ஆண்டுதோறும் 6% சொத்து வரி உயர்வுக்கு எதிராக மனு – தமிழக அரசு பதில் தர உத்தரவு
தமிழகத்தில் ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வை ஏற்படுத்தும் அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஹரீஷ் சவுத்திரி தாக்கல் செய்த மனுவில்,
“மாநகராட்சி சட்டப்படி, சொத்து வரியை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த முடியும். ஆனால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 264(2)-ல் 2023-இல் திருத்தம் செய்து, ஆண்டுதோறும் 6% வரி தானாக உயர்த்தப்படும் வகையில், 2024 செப்டம்பர் 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை சட்ட விரோதமானது. வரியை உயர்த்துவதற்கு முன் பொதுமக்களிடம் அறிவிப்பு வெளியிட்டு கருத்து கேட்க வேண்டியது அவசியம். ஆனால், அதனை செய்யாமல் சொத்து வரியை உயர்த்தியிருப்பது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, இந்த அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும்,” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்ஸவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. அரசு, நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.