புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கூட தொழிலாளரைப் பற்றி பேசவில்லை: சிஐடியு மாநில தலைவர் வருத்தம்

தமிழகத்தில் நேற்று கட்சி தொடங்கியவர்கள் தொழிலாளர்கள் பற்றிய எந்தவொரு பேச்சும் செய்யவில்லை என்று சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, அரசு போக்குவரத்துக் கழக மெய்யனூர் பணிமனை எதிரே 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில், சங்கத்தின் மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம்பன், பொருளாளர் சேகர் மற்றும் சிஐடியு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து பணப் பலன்களும் வழங்கப்படாதவரை போராட்டம் நிறைவடையாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் நேற்று கட்சி தொடங்கியவர்கள் தொழிலாளர்கள் குறித்த எந்தவொரு பேச்சும் செய்யவில்லை. சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டத்தில், அவர்களின் ஒற்றை கோரிக்கையும் அமல்படுத்தப்படவில்லை. குறைந்தபட்ச கூலியும் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது சுழற்சி முறையில் விடுமுறை நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்துக் கழகத்தில் 5 பணிமனைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கான்ட்ராக்ட் முறையில் செயல்படுத்தினால், அனைத்து கான்ட்ராக்ட் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இதே நிலை மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்காக உள்ளது. அவர்களையும் ஒன்றிணைத்து சிஐடியு போராட்டத்தை தொடர்கிறது. சமூக நீதி என்ற பெயரில் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். போக்குவரத்து துறையை உருவாக்கிய கருணாநிதி இதனை எப்போதும் தனியார் மயமாக்க விடமாட்டார்.

ஆனால், இப்போதைய ஆட்சியாளர்கள் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கி வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்படும், என்று சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box