நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டியை ஆதரிப்போம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, நீதி மற்றும் மனிதநேயத்துக்காகப் போராடிய சுதர்சன் ரெட்டி இப்போது தேவைப்படுகிறார். அரசியலமைப்பை அழிக்க பாஜக முயல்வதால், அதைப் பாதுகாக்க அவர் நமக்குத் தேவை. அவரை நாம் ஆதரிப்போம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் பி.சுதர்சன் ரெட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் இதுபோல் கூறினார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில், தெலங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், சுதர்சன் ரெட்டி இண்டியா கூட்டணி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார். இன்று சென்னை வந்த அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

நிகழ்ச்சியில் பேசிய சுதர்சன் ரெட்டி, “தொலைநோக்குப் பார்வை மற்றும் புத்தாக்க சிந்தனையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. ஒரு நீதிபதியாக நான் அரசியலமைப்பை நிலைநிறுத்திக் கொண்டிருந்தேன். தற்போது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். வெற்றி பெற்றால், இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்,” என தெரிவித்துள்ளார்.

சுதர்சன் ரெட்டியை ஆதரித்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் உங்களை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 60 ஆண்டுகளாக அவர் நீதிக்காக பாடுபட்டுள்ளார். நேர்மையான நீதிபதியாக பணியாற்றி அரசியலமைப்பை பாதுகாத்தார்.

தமிழ்நாட்டின் உணர்வகளை சுதர்சன் ரெட்டி மதிப்பார். அதனால்தான் அவர் தேசிய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்கும் ஒரு நிகழ்வில், அது நாட்டின் பன்முகத்தன்மைக்கு வழிவகுக்காது என்று பேசினார். அவரை ஆதரிக்க இதைவிட சிறந்த காரணம் நமக்கு வேண்டுமா?

ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவரை நக்ஸல் ஆதரவாளர் என கூறியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிக்க அவர்களால் முடியவில்லை. அதற்காக அவர் மீது பழி சுமத்த விரும்புகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக எல்லாவற்றையும் செய்து வருகிறது. தமிழர் என்ற போர்வையில் அக்கட்சி ஆதரவை கோருகிறது. இது ஒரு பழைய தந்திரம். எனவே, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, நீதி மற்றும் மனிதநேயத்துக்காகப் போராடிய சுதர்சன் ரெட்டி இப்போது தேவைப்படுகிறார்,” என்று கூறினார்.

நிகழ்ச்சியில், டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா, ஆ. ராசா, வில்சன், திருமாவளவன் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box