ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி: அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் – விவசாய சங்கங்களின் கோரிக்கை
ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகளுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ. இளங்கீரன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசிக்கு மாநில அரசு அனுமதி அளித்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் 31.10.2023 அன்று மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
இதனை ஏற்கக்கூடாது என்று விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்த போதிலும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கை HELP அடிப்படையில், மூன்றாவது சுற்று OALP ஏலத்தின் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனம் ராமநாதபுரத்தில் 143.41 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது.
அந்த பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகள் அமைக்க திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, தேவகோட்டை ஆகிய தாலுகாக்களில் புதிய கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒன்றிய அரசு புதிய parivesh தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய அனுமதி, யாரும் அதிகம் பயன்படுத்தாத பழைய environmentclearance.nic.in தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழக அரசு 2020 ஆம் ஆண்டு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி புதிதாக எந்த ஹைட்ரோ கார்பன் கிணறுகளும் அமைக்க முடியாது. ஆனால் பழைய அனுமதி பெற்ற கிணறுகள் தொடரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கம் சார்பில், அவையும் மூடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அந்த சட்டத்தின் அடிப்படையில் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் சில பகுதிகள் மற்றும் புதுக்கோட்டையில் ஐந்து ஒன்றியங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன. பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டதால், அதையும் சட்ட வரம்புக்குள் கொண்டுவர திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் தடுக்க வேண்டும்.
முன்னதாக, பாண்டிச்சேரியில் இருந்து ராமநாதபுரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தபோது திமுக முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இப்போது அனுமதி வழங்கப்படுவது விவசாயிகளை பெரும் வேதனையடையச் செய்துள்ளது.
தமிழக விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க உடனடியாக அனுமதி ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் குரலை மீறி ஓஎன்ஜிசி கிணறுகள் அமைக்க முயன்றால், கடுமையான எதிர்ப்பும் போராட்டங்களும் நடத்தப்படும் நிலை ஏற்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.