“விஜயகாந்த் பெயரை வைத்து விஜய் வாக்குகளைப் பெற நினைத்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள்” – பிரேமலதா உறுதி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நடிகர் விஜய் தனது கட்சிக்காக வாக்குகளைப் பெறும் நோக்கில் விஜயகாந்த் பெயரை பயன்படுத்த நினைத்தால், அதை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கட்சி தலைமையகத்தில் நேற்று மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாமை பிரேமலதா தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தள்ளுவண்டிகள், அயன் பாக்ஸ்கள், தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு மதிய உணவு மற்றும் ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், டெல்லி தமிழ் சங்கத்துக்கு கல்விக்காக ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கினார். தொடர்ந்து கேப்டன் முரசு புத்தகத்தையும் வெளியிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“முதல்கட்ட சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது. மக்களிடையே பேராதரவு கிடைத்தது. தூய்மை பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். அவர்கள் பணிநிரந்தரம், பழைய ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டும் இருக்கிறார்கள். ஆனால் அரசு, வீடு தருகிறோம், கல்வி உதவித்தொகை தருகிறோம், காலை உணவு திட்டம் தருகிறோம் எனச் சொல்லி, தூய்மை பணியாளர்கள் நன்றி கூறுவதாக போலியான பிரசாரம் செய்கிறது” என்றார்.

அதன்பின் விஜய் குறித்து அவர் கூறியதாவது:

“விஜய் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே விஜயகாந்த் அவரைப் பார்த்து வந்தார். எப்போதும் அவர் எங்களுடைய பையன்தான். ஆனால் விஜயகாந்த் பெயரை பயன்படுத்தி வாக்குகளைப் பெற முடியும் என்று நினைத்தால், அது சாத்தியமில்லை. எங்களுக்கென தனி கட்சி உள்ளது. அது 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டுள்ளது.

விஜயகாந்தின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவருடைய பெயரை முன்வைத்து விஜய் வாக்குகளைப் பெற முயன்றாலும், மக்களால் அது ஏற்கப்படாது” என்று பிரேமலதா தெளிவுபடுத்தினார்.

Facebook Comments Box