மேட்டூர் அணை – 5 நாட்களாக 120 அடி முழுக் கொள்ளளவில் நீர்மட்டம்
மேட்டூர் அணையில் கடந்த ஐந்து நாட்களாக நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியில் நிலைத்திருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையினைத் தொடர்ந்து, அணைக்கு வரும் நீர்வரத்து சில நாள்களில் அதிகரித்தும், சில நாள்களில் குறைந்தும் காணப்படுகிறது.
சமீபத்தில் அதிகரித்திருந்த நீர்வரத்து மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 19,850 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அது நேற்று காலை 10,850 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து தற்போது காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களுக்கு சேர்த்து 850 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரத்து மற்றும் வெளியேற்றம் இரண்டும் சமமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 120 அடியில் நிலைத்திருக்கிறது.
மேலும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில், காவிரி ஆற்றின் நீர்வரத்து நேற்று முன்தினம் 9,500 கனஅடி இருந்தது. அது நேற்று மாலை 16,000 கனஅடியாக உயர்ந்தது.