போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் நீடிக்கும் – சிஐடியு அறிவிப்பு
தமிழகத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துக் கழகங்களை சீராக செயல்படுத்த சில ஆலோசனைகளை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார். ஆனால், தற்போதைய திமுக அரசு அந்த ஆலோசனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் புறக்கணித்துள்ளது.
ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பணமாக ரூ.15,000 கோடி போக்குவரத்துக் கழக நிர்வாகத்தால் செலவிடப்பட்டுவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட அரசு எந்தவித நிதி உதவியும் வழங்கவில்லை. இப்போது ரூ.100 வருமானத்தில், ரூ.13 வட்டிக்காக வங்கிக்கடனுக்கு செலுத்தப்படுகிறது.
இவ்வாறு நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண முன்வரவில்லை. அதற்கு பதிலாக, பிற மாநிலங்களில் தோல்வியடைந்த போக்குவரத்து திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை சீர்படவும், ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள ஊழியர்களின் சிக்கல்கள் தீரவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, ஆகஸ்ட் 18 முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளதுடன், பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.