ராயப்பேட்டை – டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி விரைவில் நிறைவு பெறுகிறது

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்‌காட் இணைக்கும் 3-வது பாதை வழித்தடத்தில், ராயப்பேட்டை – டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை நீளும் சுரங்கப்பாதை பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நடைபெறும் 2-ம் கட்ட மெட்ரோ திட்டம் மொத்தம் 116.1 கி.மீ. நீளத்தில் 3 பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி,

  • மாதவரம் – சிறுசேரி சிப்‌காட் (45.4 கி.மீ.) 3-வது பாதை,
  • கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி (26.1 கி.மீ.) 4-வது பாதை,
  • மாதவரம் – சோழிங்கநல்லூர் (44.6 கி.மீ.) 5-வது பாதை,

என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. பல இடங்களில் சுரங்கப்பாதை, உயர்நிலை பாதை மற்றும் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, 3-வது பாதையில் ராயப்பேட்டையிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை நிலையம் நோக்கி 966 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த பணி கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி தொடங்கப்பட்டது. ‘பவானி’ எனும் சுரங்கத் தோண்டும் இயந்திரம் இதில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அந்த இயந்திரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மெட்ரோ நிலையத்துக்கு அருகில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் கூறினர்.

மேலும், அவர்கள் தெரிவித்ததாவது: “இந்த பகுதியில் பாறை, களிமண் இருப்பதால் சுரங்கப்பாதை அமைப்பது சிரமமாக இருக்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புவியியல் சவால்கள் இல்லாமல் மணல் மற்றும் வண்டல் மண் கொண்ட மென்மையான நிலப்பரப்பாக இருந்ததால் பணி தடை இல்லாமல் நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்து விடும்” என்றனர்.


நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்தில் புதிய நுழைவு வாயில்

நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய நுழைவு வாயிலை அமைக்க, ரூ.8.52 கோடி மதிப்பில் ஸ்ரீ ராதா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: “தற்போது இந்த நிலையத்தில் ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டுமே உள்ளது. புதியதாக உருவாக்கப்படும் இந்த கூடுதல் நுழைவு வாயில், ஜி.எஸ்.டி. சாலையின் இருபுறங்களிலிருந்தும் நிலையத்தை எளிதில் அணுகும் வசதியை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக நெரிசல் நேரங்களில் பயணிகள் சிரமமின்றி உள்வரும், வெளியேறும் சூழலை இது வழங்கும். மேலும், அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கும் சுலபமாக இணைப்பை ஏற்படுத்தும். இதனால் தினசரி பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்” என்றனர்.

Facebook Comments Box