கல்வி, சுகாதார நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது திமுக அரசு – அன்புமணி விமர்சனம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் துறைகளுக்கான நிதியை திமுக அரசு குறைத்துவிட்டது. அனைத்து துறைகளிலும் இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“கல்வி, சுகாதார துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்காத நிலையில் இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும் கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவை முதன்மைத் துறைகள். ஆனால் தமிழ்நாடு, அவற்றுக்கு சராசரி அளவிற்கும் குறைவாக நிதி ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பி.ஆர்.எஸ். இந்தியா என்ற நிறுவனம் 2024–25-ம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கல்வி துறைக்கு மாநில பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 15% ஒதுக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு 13.7% மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதே நேரத்தில் டெல்லி 24.2%, பீஹார் 21.4% ஒதுக்கியுள்ளன.
சுகாதாரத்துறைக்கு 2017-ம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கை படி குறைந்தது 8% செலவிடப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு 5% மட்டுமே ஒதுக்கி 26-ஆம் இடத்தில் உள்ளது. டெல்லி 13%, புதுச்சேரி 9.5% செலவழிக்கின்றன.
வேளாண்மைத் துறைக்கு 6.3% ஒதுக்கப்பட வேண்டிய நிலையில் தமிழகம் 6.1% மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதேசமயம் தெலுங்கானா 20.2%, சத்தீஸ்கர் 15.9%, பஞ்சாப் 10.1% ஒதுக்கியுள்ளன.
நிதி பற்றாக்குறை காரணமாக அல்லாமல், அரசின் வீண் செலவுகளால் கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பது வெளிப்படையாகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் “மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கல்வி, சுகாதார நிதியை 3 மடங்கு உயர்த்துவோம்” என்று கூறியிருந்தாலும், அதை செயல்படுத்தவில்லை.
2020–21-ல் பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.34,181 கோடியும், சுகாதாரத்துக்கு ரூ.15,863 கோடியும் இருந்தது. அதன்படி 2024–25-ல் கல்விக்கு ரூ.1,56,271 கோடி, சுகாதாரத்துக்கு ரூ.60,577 கோடி இருக்க வேண்டும். ஆனால், திமுக அரசு கல்விக்கு ரூ.44,042 கோடி, சுகாதாரத்துக்கு ரூ.20,198 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது வாக்குறுதியின் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு மாநில உற்பத்தி மதிப்பில் 1.65% ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியில் அது 1.39% ஆகக் குறைந்துள்ளது. சுகாதார நிதியும் அதிமுக காலத்தில் 0.76% இருந்ததை விட தற்போது 0.64% ஆகக் குறைந்துள்ளது.
இதனால் கல்வி, சுகாதார துறைகள் அடிப்படை வசதிகள் இன்றி சீரழிந்து வருவது மறுக்க முடியாத உண்மை. திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த துரோகங்களுக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உரிய பதிலை அளிப்பார்கள் என்பது உறுதி” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.