மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட இடங்களில் தடுப்பு அமைக்க வேண்டும் – மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் கட்டாயம் அமைக்க வேண்டும் என மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மண் தோண்டப்பட்ட பகுதிகள் மக்களுக்கும் வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாமல் தடுப்புகள் அமைத்து பணி மேற்கொள்ள வேண்டும்.
தடுப்புகள் அமைக்காமல் அலட்சியம் காரணமாக பொதுமக்களுக்கு விபத்து அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்தப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்பு வசதி இல்லாமல் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால், மக்கள் 1913 என்ற மாநகராட்சி புகார் எண் மூலம் தகவல் அளிக்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.