முதல்வர் ஸ்டாலினுடன் கவினின் தந்தை சந்திப்பு – சில கோரிக்கைகள் முன்வைப்பு
நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் தந்தை இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கவினின் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், கவினின் தந்தை சந்திரசேகர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவின் தந்தை சந்திரசேகர், “கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தோம். தைரியமாக இருங்கள், நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்” என்றார்.
அப்போது, விசிக தலைவர் திருமாவளவன் கூறும்போது, “கவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கொலையில் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. எனவே யாரும் தப்பித்து விடாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம். கவினின் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
கவினின் தாய் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பாதுகாப்பான சூழல் இல்லை என்று அவர் கருதுவதால், சொந்த கிராமத்துக்கு பணி மாற்றம் செய்ய கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் என்பது மிக முக்கியமான கோரிக்கை. இதனை தேர்தல் அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது” என்றார்.