ஆபரேஷன் சிந்தூர் பணியில் இருந்த இளம் ராணுவ வீரர் சரண் மாரடைப்பால் மரணம்
ஆபரேஷன் சிந்தூர் பணியில் இருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சரண், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த ராமசாமி – வீரஓவம்மாள் தம்பதியினரின் மகன் சரண் (29). இந்திய ராணுவத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். திருமணமாகி மனைவி பவித்ரா (24), 11 மாத பெண் குழந்தை சஸ்டிகா ஆகியோர் உள்ளனர். ஜம்மு–காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ முகாமில் 54 ஆர்.ஆர் பிரிவில் பணியாற்றி வந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி ஜம்மு–காஷ்மீரில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. நேற்று ராணுவ மரியாதையுடன் சரண் உடல் தகனம் செய்யப்பட்டது.