அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததால் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு

போதிய ஆசிரியர்கள் மற்றும் தரமான கல்வி இல்லாததால், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பழனிசாமி, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேசியதாவது:

“அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச காலணி, புத்தகப்பை, சைக்கிள், லேப்டாப் போன்ற நலத்திட்டங்களை திமுக அரசு அரசியல் காரணங்களால் நிறுத்திவிட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்.

அதிமுக ஜனநாயகக் கட்சி; ஆனால் திமுகவில் அதிமுகவிலிருந்து சென்றவர்களுக்குத்தான் முக்கிய பதவி கிடைக்கிறது. திமுக திறமையற்ற கட்சி; அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்பதால் கொள்ளை ஆரம்பித்துவிட்டது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது. காரணம் – போதிய ஆசிரியர் இல்லாமை மற்றும் தரமான கல்வி குறைபாடு. இதனால் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர்.

மேலும், அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு பல நலத்திட்டங்களை – நோன்பு கஞ்சிக்கு அரிசி, ஹஜ் மானியம், ஹஜ் இல்லம் கட்ட நிதி, உலமாக்கள் ஓய்வூதியம், தேவாலய நிதி உதவி, ஜெருசலேம் புனித பயணம் உதவி போன்றவற்றை வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது.

சிறுபான்மையினர் திமுக கூட்டணி கட்சிகள் பரப்பும் அவதூறுகளை நம்பாமல், உண்மையை உணர வேண்டும்,” என பழனிசாமி வலியுறுத்தினார்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.விஜயபாஸ்கர், தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Facebook Comments Box